Messages on health and environment for the general public

கம்பீரமான மலைப் பார்த்து ரசித்தேன்

அதன் உறுதியை நினைத்து மலைத்தேன்

ஆனால் மனிதன் அதனை உடைப்பதை

தெரிந்து சலித்தேன்.


அகலமானக் கடலைப் பார்த்து ரசித்தேன்

அதன் ஆழத்தை நினைத்து களித்தேன்

ஆனால் மனிதன் அதனைக் குடைவது

தெரிந்து சலித்தேன்.


மெலிதாக வீசும் காற்றைத் தென்றல் என உணர்ந்தேன்

அதன் சுகந்தத்தில் எனை மறந்தேன்

ஆனால் மனிதன் அதனை மாசுபடுத்துவதை

அறிந்து சலித்தேன்.


ஒளி தரும் தீயை பார்த்து ரசித்தேன்

அதன் ஒளியில் கீதைப் படித்தேன்

ஆனால் மனிதன் அதனை அழிக்க

பயன்படுத்துவதைப் பார்த்து சலித்தேன்.


பரந்த ஆகாயத்தைப் பார்க்க நிமிர்ந்தேன்

அதன் எல்லையை அறியமுடியாமல் வியந்தேன்

ஆனால் மனிதன் அதன் பாதுகாப்பு உறையைத்

துளைப்பதை அறிந்து சலித்தேன்.


செய்வது அறியாமல் திகைத்தேன்

ஆனால் இயற்கையைக் காப்பாற்றும்

சிலரின் முயற்சியில் மனம் மகிழ்ந்தேன்.


எனக்கும் உதவி செய்ய ஆசைதான்

நீங்களும் உடன் இருப்பீர்கள் என எண்ணித்தான்

மனம் குளிர்கிறேன்.

கடல் தாயின் மடியில்

கண் விழிக்கும் காலைக்கதிரவன்..

மலைகளின் பின்னே மறைந்திருந்து

எட்டிப்பார்க்கும் மாலைச்சூரியன்..

மேகங்களின் பின்னிருந்து கண்ணாமூச்சு ஆடும்

கார் காலக்கதிரவன்..

பசும் பயிர்களை செழிக்க வைக்கும் பகலவன்..

தென்னங்கீற்றுகளின் ஊடே சிதறித்தெரியும்..

சிகப்பு சூரியன்..

வட்டமாக ஜொலிக்கும் வண்ண சூரியன்..

கோடையில் மட்டும் அவன் கொடுஞ்சூரியன்..

அவன்….வானில் செய்யும் வர்ணஜாலம்..

மனதை மயக்கும் மாயாஜாலம்..

ஒளிரும் ஞாயிறின் எழில் மிகும் கோலங்களை

ஓர் கவிதையில் ஒளித்து விட முடியுமா?

எழுதுகோலில் விலங்கிட்டு

வார்த்தைகளில் தான் சிறை பிடிக்க முடியுமா?